திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

Siva

ஞாயிறு, 30 மார்ச் 2025 (09:59 IST)
டெல்லியில் தனியார் ஆங்கில ஊடகத்தின் ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது நடந்த கேள்வி-பதில் நிகழ்வில், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது:
 
முன்பு தமிழகம் மிகுந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தது. ஆனால் திமுக அரசின் தவறான கொள்கைகளால் தற்போது பெரும் குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஊழலையே முக்கியமாக கருதும் திமுக ஆட்சியின் காரணமாக தொழிற்சாலைகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றன. வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்களும் வெளிமாநிலங்களை நோக்கிச் செல்கிறார்கள்.
 
நான் தொழில்முறை கல்வியை தமிழில் தொடங்க வேண்டும் என்று திமுக அரசுக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாட புத்தகங்களுக்கூட உரிய தமிழாக்கம் செய்யப்படவில்லை. திமுக உண்மையில் தமிழ் விரோதக் கட்சியே. குடும்ப அரசியலை முன்னிறுத்தும் இக்கட்சி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை வாரிசாக நடத்த விரும்புகிறார். 
 
நான் சமீபத்தில் தமிழகம் சென்றபோது, மக்கள் திமுக ஆட்சியில் மிகுந்த அதிருப்தியுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். அவர்கள் திமுகவை பதவியில் இருந்து அகற்றத் தீர்மானித்துள்ளனர். அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், எந்த மாநிலத்திற்கும் மிக சிறிய அளவுக்கூட அநீதி செய்யப்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்," என அவர் விளக்கினார்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்