கலவரத்தை தூண்டிவிட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்!

திங்கள், 29 ஜூன் 2015 (19:48 IST)
ஆம்பூரில் கலவரத்தை தூண்டி விட்ட அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் மகா மக்கள் தொடர்பு இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.
 
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தற்போது தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. ஒரு காலத்தில் வரலாறு படைத்த தமிழகம், இன்று வரலாற்று பிழையை படைத்திருக்கிறது.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதற்கு இன்று நடைபெறும் மறு வாக்குப்பதிவே சாட்சி.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அந்த திட்டத்தை துரிதப்படுத்தி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் தீவிர நடவடிக்கையில் அந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
 
ஆனால், தமிழக அரசு இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் யாரையும் அழைக்கவில்லை. விளம்பரத்திலும் பிரதமர் மோடி படத்தை பிரசுரிக்கவில்லை.
 
தற்போது தமிழகத்தில் ஜாதி, மத கலவரங்கள் அதிகரித்து வருகிறது. ஜாதி கலவரத்தால் 100க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பூரில் நடந்த கலவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஆம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அந்த தொகுதி எம்.எல்ஏ. அஸ்லம் பாஷா பேசிவிட்டு சென்றிருக்கிறார். அதன்பிறகுதான் அங்கு கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்த கலவரத்தை அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ.தான் தூண்டி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
 
இந்த கலவரம் தொடர்பாக மதசார்பற்ற கட்சி தலைவர்கள் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காதது வியப்பளிக்கிறது.
 
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையால் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்