சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பின் உச்சத்தை அடைந்து வருகிறது.. சட்டசபையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என ஓ.பி.எஸ் கூறியதை அடுத்து, அனைத்து எம்.எல்.ஏக்களையும், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள ஒரு விடுதியில் சசிகலா தரப்பு தங்க வைத்தது...
ஆனால், அவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்படிருப்பதால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என சில வழக்குகளும், எம்.எல்.ஏக்களை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்களும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில், கூவத்தூர் விடுதிக்கு இன்று ஆம்புலன்ஸும், அதில் சில மருத்துவர்களும் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏக்கள் யாரேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டாரா, அல்லது அனைவருக்கும் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்றார்களா? இல்லை, எம்.எல்.ஏக்களில் சிலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ சிகிச்சை அளிக்க சென்றார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என எதுவும் தெரியவில்லை...