ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம்? – அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு!

திங்கள், 26 ஏப்ரல் 2021 (10:47 IST)
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு மையத்தை மட்டும் அவசர நிலை கருதி திறக்க வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது உள்ள அவசர நிலையில் ஆக்ஸிஜன் தேவை என்பதால் அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட்டில் அனுமதிக்கலாம் என்றும், அதை கண்காணிக்க உச்சநீதிமன்ற சிறப்பு குழு அமைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த முடிவை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்