அ.தி.மு.க விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம் - ராமதாஸ்

வெள்ளி, 21 நவம்பர் 2014 (11:52 IST)
சென்னையில் நடைபெற்ற பாமகவின் செயற்குழு கூட்டத்தில், அ.தி.மு.க விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
 
இது குறித்து ராமதாஸ் பேசியதாவது:-
 
திருமணத்தில் கருணாநிதியும் நானும் சந்தித்துக் கொண்டோம் என்பது தனி விவகாரம். அதை வைத்துக் கொண்டு திமுக-பாமக கூட்டணி என்று ஊடகங்கள் கூறின.
 
இந்த விவகாரத்தில் பாமகவினருக்குக் கூட சந்தேகம் இருக்கிறது. கடைசி நேரத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துவிடுவேன் என்று நினைக்கின்றனர். எந்தச் சூழலிலும், கடைசி நேரத்தில்கூட திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். பாமக தலைமையில் அணி அமைப்போம். தொடர்ந்து செயல்படுவோம். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் என்றார்.
 
மேலும், ஊழல் என்ற 3 எழுத்து தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்.
 
அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் விசாரணையின்போதே கைவிடப்பட்டு இருக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டில் அவருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
 
மணல் கொள்ளையில்அதிமுக வும், திமுக வும் போட்டி போட்டு ஊழல் செய்து இருக்கிறன. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய 2 துறைகள் தான் ஊழலின் ஊற்று.
 
சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு ரூ.2½ லட்சம், துணைவேந்தர் பதவிக்கு பல கோடி என்று வரையறை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். கட்டிடம் கட்டப்படுகிறது என்றால், சி.எம்.டி.ஏ.க்கு சதுர அடிக்கு ரூ.50 வழங்கப்பட வேண்டும்.
 
ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்கிறார்கள். அ.தி.மு.க விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம். அதாவது, ஊழல் தி.மு.க.
 
அதிமுக.வை குறை சொல்வதால் திமுக வுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணை கமிஷன் அமைத்தது திமுக வுக்கு மட்டும் தான். ஆகவே இந்த இரண்டு ஊழல் கட்சிகளையுமே நாம் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது.
 
2016 இல் பாமக ஆட்சி அமையும். இதை நம்மை தவிர வேறு யார் சொன்னாலும் அது வெற்று கோஷமாக தான் இருக்கும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்