இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு நடத்துகின்ற அதுவும் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரதமர் அவர்களே கூட்டுகின்ற மாநிலங்களிடை மன்றத்தின் மாநாட்டிற்குக் கூட நம்முடைய முதலமைச்சர் செல்லாமல், நிதியமைச்சரை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் பிரதமர் கூட்டும் முக்கியமான மாநாட்டிற்கு முதலமைச்சரே நேரில் சென்று நமது மாநிலத்தின் தேவைகளையும், மக்கள் நலனுக்கான திட்டங்களையும் எல்லாம் எடுத்துச் சொல்வதற்கும், அமைச்சர் ஒருவர் சென்று கேட்பதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு அல்லவா?
இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர்கள் மாநாட்டில்தான் வங்கிகளையெல்லாம் நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற கருத்தை முதன் முதலாக நான் பேசி, மறுநாள் டெல்லியில் உள்ள நாளேடுகள் எல்லாம் அதனைப் பெரிதாக வெளியிட்டிருந்தன.
முதலமைச்சர்கள் மாநாட்டில் நான் பேசியதன் விளைவாகத்தான் இந்தியாவில் 14 தேசிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது வரலாறு. எனவே இப்போது முதலமைச்சர்கள் மாநாட்டினை தமிழக முதலமைச்சர் தவிர்த்திருப்பது, நமது மாநில நலனுக்கு உகந்ததல்ல" என்று கூறியுள்ளார்.