போரினால் பிரிந்த குடும்பத்தை 36 ஆண்டுகளுக்கு பின் இணைத்த ’வாட்ஸ் ஆப்’

திங்கள், 6 ஜூலை 2015 (14:01 IST)
இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ் ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
 
திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும்.
 
கடந்த 1982ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் போர் தீவிரம் அடைந்ததால், சாமுவேல் தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி திருச்சியில் குடியேறினார். அப்போது சாமுவேலுடன் அவரது தங்கை லீதியாள் குடும்பமும் திருச்சி வந்தது. அவர்களும் சாமுவேலின் வீட்டின் அருகேயே வசித்து வருகின்றனர்.
 
சாமுவேல் மற்றும் லீதியாளுக்கு ஞானப்பூ என்ற அக்கா ஒருவர் உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் 1979ஆம் ஆண்டே இலங்கையை விட்டு வெளியேறி விட்டார். இதனால், சாமுவேல், குடும்பத்திற்கும், ஞானப்பூ குடும்பத்திற்கும் இடையே தொடர்பில்லாமல் இருந்து வந்துள்ளது. சகோதரி ஞானப்பூவைத் தொடர்ந்து தேடி வந்தனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் சாமுவேலின் மருமகள் சுகந்தி, வாட்ஸ் ஆப் மூலம் தனது மாமனார் சாமுவேல் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் ஞானப்பூவை தேடும் தகவலையும் பதிவு செய்தார். இந்தத் தகவல் இலங்கை அகதிகள் உள்ள குரூப் மூலமாக வெகுவாகப் பரவியது.
 
இதனையடுத்து சாமுவேல் திருச்சியில் இருப்பதாகவும் அவரும் ஞானப்பூவை தேடி வருவதாகவும் உறவினர்கள் மூலம் ஞானப்பூவின் மகன் லாசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லாசர், செல்போன் மூலம் சாமுவேலின் மருமகள் சுகந்தியை கடந்த வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டார்.
 
அப்போது சாமுவேலும், அவரது தங்கை லீதியாளும் திருச்சியில் குடும்பத்துடன் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கானம் கிராமத்தில் இருந்த ஞானப்பூ குடும்பத்தார் நேற்று காலை திருச்சி வந்தனர்.
 
36 ஆண்டுகளுக்குப்பின் ஒன்று சேர்ந்த அக்குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்தது அவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்