சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்க முடியாது: கிளம்பியது எதிர்ப்பு; அதிமுகவினர் சாலை மறியல்!

வியாழன், 29 டிசம்பர் 2016 (12:14 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பான பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தை அடுத்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியது. அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என கூறினர். ஆனாலும் சசிகலாவுக்கு எதிர்ப்புகள் இருந்து தான் வந்தது.
 
இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பின்னர் முதன் முதலாக அதிமுக பொதுக்குழு இன்று கூடியது. இதில் சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பை ஒப்படைத்தனர். பொதுக்குழுவுக்கு வந்த அதிமுகவினர் இதனை கொண்டாடினாலும் சில இடங்களில் அதிமுகவினர் இதனை ஏற்காமல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவை பொது செயலாளராக ஏற்று கொள்ள முடியாது கோஷம் எழுப்பி அதிமுக தொண்டர்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்