அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: இணையத்தில் கசியும் தகவல்கள்!
வியாழன், 5 மே 2016 (11:57 IST)
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். திமுக, பாமக, பாஜக, தேமுதிக-மக்கள் நல கூட்டணி என பிரதான கட்சிகள் பல தேர்தல் அறிக்கைய வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த தேர்தலில் முக்கிய பிரதான கட்சியும், ஆளும் கட்சியுமான அதிமுக இன்னமும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. வழக்கமாக எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா இந்த தேர்தலில் இன்னமும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த தேர்தல் இன்று அல்லது நாளை வெளியாக வய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடைசி நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களை கவர்ந்து ஓட்டுக்களை பெற தான் இந்த அதிரடி திட்டம் என ஆளும் கட்சியினர் பேசுகின்றனர்.
மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சியான, அதிரடி திட்டங்களும், இலவசங்களும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த தேர்தல் அறிக்கை தமிழக தேர்தல் களத்தை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றும் என கூறப்படுகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமாம்?:
* அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்சாதன பெட்டி அல்லது சலவை இயந்திரம்.
* இலவச சைக்கிள் வழங்கிய திட்டம் போல மொபெட் வழங்கும் திட்டம் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
* மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு
* மீனவர்களுக்கான அறிவிப்புகள்
* விவசாய கடன் ரத்து
* முதியோர் ஓய்வூதியம் அதிகப்படுத்தப்படும்.
* காப்பீடு திட்டத்தின் வரம்பு உயர்த்தப்படும்.
* தமிழக அரசு சார்பில் இலவச கேபிள் வசதி வழங்கப்படும்.
* அரசு கேபிள் மூலம், வைஃபை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இப்படி தலை சுற்றும் அளவுக்கு திட்டங்கள் இருக்கும் என இணையத்தில் பேசி வருகின்றனர். இதில் எந்தெந்த திட்டங்கள் இடம் பெறும், எவை இடம் பெறாது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.