இடைத்தேர்தலுக்கு பாஜகவிடம் அதிமுக ஆதரவு கேட்காதது ஏன்?

வியாழன், 26 செப்டம்பர் 2019 (20:57 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகின்றன. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் நாளை அல்லது நாளை மறுநாள் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
 
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக, பாமக, சரத்குமார் கட்சி போன்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது.
 
 
அதேபோல் திமுக தலைவர்களும் தனது கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ள கட்சியான பாஜகவிடம் இதுவரை அதிமுக தலைவர்கள் ஆதரவு கேட்கவில்லை. இனிமேலும் ஆதரவு கேட்பார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை பாஜக உடன் கூட்டணி என்றாலே தோல்வி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அக்கட்சியிடம் இருந்து ஒதுங்கியிருக்க அதிமுக தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது 
 
 
மத்திய பாஜக அரசின் திட்டங்களை ஆதரிப்பது ஒருபுறம் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் மட்டும் பாஜகவிலிருந்து விலகி இருப்பதே நல்லது என அதிமுக தரப்பினர் கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்