ஜல்லிக்கட்டுக்காக மோடியை சந்திக்க தயாராகும் விஷால்!

புதன், 18 ஜனவரி 2017 (13:01 IST)
ஜல்லிக்கட்டு விஷயம் தொடர்பாக நடிகர் விஷால், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.


 

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், “தமிழக கலாச்சாரமான ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். நடக்கும். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் குரல் மத்திய அரசுக்கு கேட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். சந்திக்கும்போது ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவேன் என்றார். எம்.பி.க்கள் சந்திக்க நேரம் கேட்டாலே பிரதமரிடம் இருந்து பதில் வர தாமதமாகிறது என்கின்றனர்.

அப்படியில்லை... பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கும். ஜல்லிக்கட்டு நடக்கும் என்று நம்புகிறேன். பீட்டா அமைப்பில் நான் உறுப்பினராக இல்லை. யாரோ என் படத்தை போட்டு எழுதினால் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்