இந்த போராட்டத்திற்கு நடிகர் விஜய், இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சேரன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் டி.ராஜேந்தர், இயக்குநர் கவுதமன், நடிகர் கருணாஸ், நடிகர் சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பீட்டா இந்தியா அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான நிகுஞ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது தற்செயலான நிகழ்வு அல்ல என்றும், விரைவில் வெளியாக இருக்கும் சிங்கம் 3 படத்துக்காகத்தான் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் சட்டவிரோதமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் மற்றும் மனிதர்கள் தங்களது உயிர்களை இழந்ததாகவும், இது போன்ற கொடூரமான சம்பவங்கள் அரங்கேறும் ஒன்றை, நாட்டின் உயர்ந்த நீதியமைப்பு சட்டவிரோதமானது என்று கண்டித்த ஒன்றை சுய விளம்பரத்திற்காக ஆதரவு தெரிவிப்பது மோசமான செயலாகும் என்றும் தெரிவித்துள்ளது.