கொய்யாப் பழத்தால் பலியான பள்ளி மாணவன்

செவ்வாய், 9 ஜனவரி 2018 (08:12 IST)
வகுப்பறையில் கொய்யப்பழத்தை சாப்பிட நினைத்து அதனை பிளேடால் அறுக்க முயன்ற போது தவறி தனது தொடையை அறுத்துக் கொண்ட பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன். வாய்பேச முடியாதவரான சிராஜுதீன் அந்த பகுதியில் டைலர் கடை வைத்திருக்கிறார். அவரது ஒரே மகனான அன்சாத்(14) அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அன்சாத் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கொய்யாப்பழத்தை சாப்பிட நினைத்து, பழத்தின் ஒரு பாதியை தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, ஒரு பிளேடைக் கொண்டு கொய்யாப்பழத்தை தன் தொடையில் வைத்து அறுக்க முயன்றிருக்கிறார்.
 
எதிர்பாராத விதமாக கொய்யப்பழம் நழுவியதால், பிளேடானது மாணவனின் தொடையில் பாய்ந்திருக்கிறது, இதனைத்தொடர்ந்து அன்சாத்தின் தொடையிலிருந்து வேகமாக ரத்தம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அன்சாத்தை அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அன்சாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அன்சாத்தின் இடது தொடையில் ஆழமான காயம் ஏற்பட்டு இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டு, இதயம் செயலிழந்ததன் காரணமாகவே அன்சாத் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பத்தால் அன்சாத்தின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்