போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு 750 கோடி ரூபாய் வழங்கப்படும்; தமிழக முதல்வர்

புதன், 10 ஜனவரி 2018 (12:23 IST)
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி பொங்கலுக்கு முன்பாக ஓய்வூதியதாரர்களுக்கு 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார் 
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது. தற்காலிக ஓட்டுனர்கள் ஆங்காங்கே விபத்துகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போராட்டம் கைவிடப்படாததால் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் நபர்களுக்காக தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவிற்கு தமிழக அரசு வந்திருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். எனவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தைதை விட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்