கடந்த சில ஆண்டுகளாகவே தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் நகரின் ஒரு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுவனை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. இதில் சிறுவனின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அச்சிறுவன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பேசுகையில், "தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.