கோயம்புத்தூர் அருகே சூலூரில் உள்ள தனியார் இஞ்சினயர் கல்லூரியில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், அதில் 5 மாணவர்கள் மது குடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இரவு 10 மணியளவில் மதுக்கடைக்கு சென்று மதுவை வாங்கியவர்கள் முத்து கவுண்டன்புதூர் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை ஏறிய அவர்களுக்கு ரயில் வருவது தெரியாமல் போனது. அந்த பக்கமாக வேகமாக சென்று கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மேல் மோதியதில் நான்கு பேர் உடல் துண்டாகி பலியானார்கள். ஒரு மாணவர் மட்டும் தண்டவாளத்திற்கு வெளிப்பக்கம் இருந்ததால் உயிர் பிழைத்தார்.
மாணவர்கள் இறந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தனர். சிதறிய மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. படித்து பட்டம் பெற வேண்டிய மாணவர்கள் இப்படி மது அருந்தி விபத்தில் இறந்த சம்பவம் மாணவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.