நெல்லை மாவட்டம், தென்காசியில் சர்க்கரை நோய்க்கு நாட்டு மருந்து சாப்பிட்ட மூவரும், மருந்து கொடுத்த போலி மருத்துவர் உள்பட 3 பேர் இறந்தனர்.
தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் வைரமுத்து மகன் முத்துபாண்டி (54). சித்த மருத்துவர் என்று தன்னைக் கூறிக்கொண்ட இவர் தென்காசியில் மருத்துவமனை அமைத்து அப்பகுதியில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு நாட்டு மருத்துவம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தென்காசி அழகபுரத்தில் வசித்து வரும் சௌந்திரபாண்டியன் மகன் இருளாண்டி (40), இதேபகுதியை சேர்ந்த முருகையா மகன் பாலசுப்பிரமணியன் (30), வேலுச்சாமி மகன் சௌந்திரபாண்டியன் (54), சாமிநாதன் ஆகியோருக்கு சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்காக மூலிகை மருந்து கொடுத்தாராம்.
அவர்கள் இந்த மருந்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, தானே மருந்தைச் சாப்பிட்டு நிரூபிப்பதாகக் கூறி சாப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மற்ற மூவருக்கும் கொடுத்துள்ளார். மூலிகை மருந்தினை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கினர்.
அவர்களை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருளாண்டி, பாலசுப்பிரமணியன், மருத்துவர் முத்துபாண்டி ஆகியோர் இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.