ஆயிரத்திலும் வேண்டாம், ஐநூறிலும் வேண்டாம் வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும் என்னிடம் மருத்துவம் பார்க்கலாம் என மனிதநேயத்தோடு மருத்துவம் பார்த்தவர் கோவை சிங்காநல்லூர் ராஜ கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (67).
இதனால் பயனடைந்த ஆவாரம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி ஏழை, எளிய மக்கள், அவரை 2 ரூபாய் டாக்டர் என்றும் 20 ரூபாய் டாக்டர் என்றும் அன்புடன் அழைத்து வந்தனர்.
மேலும், விடுப்பு இல்லாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று அவரது உடல் ஒண்டிப்புதூர் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் கூறும்போது, ‘நோயாளிகள் மருந்து வாங்கும் செலவைக் கூட குறைக்க வேண்டும் என்பதற்காக, தன்னிடமிருக்கும் மருந்துகளையே பெரும்பாலும் வழங்குவார். இதனால் பாலசுப்பிரமணியத்தை தேடி வருவோர் ஏராளம். இங்குள்ள பல குழந்தைகளுக்கு பெயர் வைத்தவர் கூட இந்த மருத்துவர்தான். அந்த அளவுக்கு எங்களில் ஒருவராக இருந்தவரை இன்று இழந்துவிட்டோம்’ என்றனர்.