இறந்த மீனவர் குடும்பத்துக்கு 20 லட்சம், அரசு வேலை: ஆர்கே நகர் தேர்தல் வேலை செய்யுதோ?

செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:39 IST)
ஓகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்துக்கு 12 நாட்கள் கழித்து சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு சென்று ஆய்வு நடத்திய அவர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
 
ஓகி புயலால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான மீனவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தவில்லை என மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.
 
ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் ஆர்கே நகர் தொகுதில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தார். பல்வேறு கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இன்று திடீரென குமரி மாவட்டம் விரைந்தார் அவர்.
 
அங்கு சென்று சேதப்பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மீனவ பிரதிநிதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் அறிவித்தார்.
 
ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலை குறிவைத்து தான் வெளியானது என சந்தேகிக்கப்படுகிறது. ஆர்கே நகரில் உள்ள மீனவ மக்களின் ஓட்டுகளை குறிவைத்து தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்