இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில் சென்னையில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னையில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றி தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர். அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மட்டும் இதுவரை 2,12,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் 1,30,531 பேரிடம் மாஸ்க அணியாததற்காக அபராதமும், தனிமனித இடைவெளியை பின்பற்றாத 6,465 பேரிடம் சுமார் ரூ.26 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.