சசிகுமார் படுகொலை; இறுதி ஊர்வலத்தில் கலவரம்; போலீசார் ஜீப் எரிப்பு : 108 பேர் கைது

சனி, 24 செப்டம்பர் 2016 (11:21 IST)
கோவையில் கூலிப்படையினாரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மரணத்தை அடுத்து கோவையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
இந்து முன்னணியின் கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சசிக்குமார். கடந்த செப்.22ம் தேதி இரவு, அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கையில், 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி சாய்த்தது.  
 
இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவரை, பொதுமக்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 
 
சசிகுமரின் கொலை கண்டித்து, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில்  நேற்று கலவரங்கள் வெடித்தது. பெரும்பால கடைகள் மூடப்பட்டிருந்தது. பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி இருக்கிறது. அதனால் அங்கு அறிவிக்கப்படாத பந்த் போல் காணப்பட்டது. மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை, இந்து முன்னணி அமைப்பினர் நேற்று சேதப்படுத்தினர். இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

 
இந்நிலையில், நேற்று சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது மீண்டும் கலவரம் வெடித்தது. பூட்டியிருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.  அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் தாக்கப்பட்டன.  அதை அடக்க போலீசார் முயன்ற போது அவர்கள் மீது இந்து முன்னனி அமைப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் 4 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். கோவை மற்றும் துடியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 
 
இந்து முன்னனி அமைப்பினர் அதிகமாகவும், போலீசாரின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததால், கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசாரும் அங்கும் இங்கும் ஓடியதை பார்க்க முடிந்தது. உயர் அதிகாரிகள் அங்கு இல்லாததால் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் போலீசார் முழித்தனர். அதன்பின் தடியடி நடத்தும் படி அவர்களுக்கு தொலைபேசி மூலம் உத்தரவிடப்பட்டது.
 
அதன்பின் போலீசார் தடியடி நடத்தினர். அதனால் கும்பல் நான்கு பக்கமும் சிதறி ஓடியது. ஆனால், போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கலவரைத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருநிலையில், கலவர கும்பல் போலீசாரை விரட்ட தொடங்கியது. அப்போது அங்கு நின்றிருந்த காவல் நிலையத்திற்கு சொந்தமானா ஒரு டாடா சுமோ காருக்கு அந்த கும்பல் தீ வைத்தது. இதில் அந்த வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கிய கலவரம் மாலை 4.45 மணி வரை நீடித்தது.


 

 
அந்த கலவரத்தால், துடியலூர் பேருந்து நிலையம் முதல், காவல் நிலையம் அவரை போர்க்களமாக காட்சியளித்தது. கலவரம் சற்று தனிந்த பின் உயர் போலீசார் அதிகாரிகளுடன், கலெக்டர் ஹரிஹரன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் கலவரத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 240 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சசிகுமாரின் மரணம் மற்றம் அதனால் ஏற்பட்ட கலவரம் கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்