துறைமுகம், கடற்கரை ரயில் நிலையம், சுங்கத்துறை அலுவலகம், முக்கிய அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், பர்மா பஜார் என பரபரப்பாக இயங்கும் சென்னை, ராஜாஜி சாலையில் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் இடிந்து விழுந்தது. பிரிட்டிஷார் காலத்தில் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம் தற்போது தனியார் ஒருவருக்கு சொந்தமானது. நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருந்ததால் இந்த கட்டிடம் பாழடைந்துபோய் இருந்தது
சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்வதால் இந்த கட்டிடம் இடிந்துவிழும் ஆபத்து இருப்பதாக அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை செய்தும் அதிகாரிகள் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளரின் கண்டுகொள்ளாததால் தற்போது கட்டிடம் இடிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர், போலீஸார், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பகுதி மக்களை வெளியேற்றி கட்டிடத்தை முழுமையாக இடித்தனர். தற்போது இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.