'ஹிலாரியே பாராட்டிய நூலகம்' -வைகோ

வியாழன், 3 நவம்பர் 2011 (11:34 IST)
மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பூமிநாதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த வைகோ அண்ணா நூலகம் மருத்துவமனையாக மாறப்போகும் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வைகோ: "சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றபோவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரியே இந்த நூலகத்தை பாராட்டி உள்ளார். எனவே இதை மாற்றக்கூடாது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "திருச்சியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 19-ந்தேதி பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. அ.தி.மு.க. அரசின் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அரசின் போக்கை கண்டிப்பதற்காக சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்.

பெரியாறு அணையை உடைத்தால் எதிர்கால தமிழகம் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். எனவே இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையர் நேர்மையாக நடந்து இருந்தாலும் கீழ்நிலை அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். கூடங்குளம் பிரச்சினையில் அந்நிய சக்திகளின் ஆதரவுடன் போராட்டம் நடப்பதாக கூறுவது சரி அல்ல. அணு உலையால் பயனை விட அழிவுதான் அதிகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்