'நிமோனியா காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலி'

செவ்வாய், 3 நவம்பர் 2009 (10:50 IST)
''உலகம் முழுவதும் 'நிமோனியா' காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலியாகின்றனர்'' என்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மரு‌த்துவமனை 'டீன்' டாக்டர் வி.கனகசபை தெரிவித்துள்ளார்.

ெ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், உலகம் முழுவதும் முதல் முறையாக நிமோனியா தடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. நிமோனியா காய்ச்சலால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில், 20 லட்சம் பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். 2 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

நிமோனியா காய்ச்சலுக்கு பலியானவர்களில் 98 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளை சார்ந்தவர்கள் ஆவர். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் வேகமாக மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மரு‌த்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெறலாம். உடனடியாக சிகிச்சை பெற்றால் இந்த நோயை விரைவில் குணப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் இருக்க குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பெறுவதற்கு முன்னரும், பின்னரும் தாய் சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஒ‌ன்றரை மாதம், இர‌ண்டரை மாத‌ம், மூ‌ன்றரை மாத‌ங்களுக்கு ஒரு முறை டி.பி.டி., தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ஜன்னி போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இனிமேல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் இருக்க மஞ்சள் காமாலை 'பி' டைப், எச்.ஐ.பி. போன்ற மருந்தும் சேர்ந்து போடப்படும். மஞ்சள் காமாலை `பி', எச்.ஐ.பி. போன்ற ஊசிகள் தனியார் மரு‌‌த்துவமனைகளில் ரூ.500 செலுத்தினால் மட்டுமே போடப்பட்டு வருகிறது. அரசு மரு‌த்துவமனையில் இந்த ஊசி வருகிற ஜனவரி மாதம் முதல் போடப்படும். இதற்கான அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விரைவில் அறிவிக்க உள்ளார் எ‌ன்று கனகசபை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்