‘தீவிரவாதிகள் கண்ணியமாக நடந்து கொண்டனர்’- இந்தியா திரும்பிய தூத்துக்குடி நர்சு மோனிஷா பேட்டி
ஞாயிறு, 6 ஜூலை 2014 (12:49 IST)
நர்சுகளிடம் தீவிரவாதிகள் கண்ணியமாக நடந்து கொண்டதாக, இந்தியா திரும்பிய நர்சுகளில் ஒருவரான தூத்துக்குடி மோனிஷா கூறினார்.
ஈராக்கில் இருந்து விமானம் மூலம் கொச்சி திரும்பிய 46 நர்சுகளில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா தீவிரவாதிகளிடம் சிக்கியதில் இருந்து மீண்டு வந்தது வரை ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியதாவது:-
ஈராக் நாட்டில் ஜூன் 12 ஆம் தேதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டோம். நாங்கள் பணிபுரிந்த மருத்துவமனையில் இருந்து எங்களை பிடித்துச்சென்ற அவர்கள் இனிமேல் நீங்கள் அனைவரும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். எங்கள் கட்டுப்பாட்டில் தான் வேலை செய்ய வேண்டும். அதற்கான சம்பளத்தை நாங்களே தருகிறோம் என்று கூறினார்கள்.
உடனே நாங்கள் தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். நீங்கள் யாரும் அவர்களின் கீழ் வேலை செய்ய வேண்டாம், உங்களை எப்படியாவது மீட்டு கொண்டு வருவோம் என்று தெரிவித்தனர். நாங்கள் பிடிபட்ட நாளில் இருந்து யாரும் வேலைக்கு செல்லவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போனது.
பின்பு புதிய அரசின் ஆட்கள் என்று கூறிக்கொண்டு எங்களிடம் வந்து பேசினார்கள். கடைசி 5 நாட்களாக நாங்கள் இருந்த மருத்துவமனையை பிடித்தது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தான். அந்த மருத்துவமனையில் நோயாளிகள், டாக்டர்கள் என்று யாரும் இல்லை. நாங்கள் 46 பேர் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மட்டும்தான் இருந்தோம். சாப்பாட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் என்ன சாப்பாடு கேட்டாலும் அதை உடனே அவர்கள் கொண்டு வந்து கொடுத்தனர்.
இது ஒரு புறம் இருக்க, நாங்கள் இருந்த மருத்துவமனையை சுற்றிலும் வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் நாங்கள் மிகவும் பயந்து, இனிமேல் உயிரோடு போக முடியாது என்று நினைத்து அனைவரும் அழுதோம். நாங்கள் இருந்த இடத்தின் அருகேதான் சதாம் உசேனின் அரண்மனையும் இருந்தது. அதன் அருகே வெடிகுண்டு வீசியதில் நாங்கள் இருந்த மருத்துவமனை கட்டிடமே அதிர்ந்தது.
அதன்பின்பு ஐ.எஸ்.ஐ.எஸ்.சை சேர்ந்தவர்கள் எங்களிடம், நாங்கள் மருத்துவமனையை வெடித்து தரை மட்டமாக்க போகிறோம். நீங்கள் அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வாருங்கள் என்று தெரிவித்தனர். உடனே நாங்கள் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வரவேண்டாம். நாங்கள் ராணுவத்திடம் கூறி எப்படியாவது உங்களை மீட்டு விடுவோம் என்று தெரிவித்தனர்.
நாங்கள் 2 நாட்களாக அவர்களிடம் அழுது வெளியே வரமாட்டோம், என்று தெரிவித்தோம். 2 நாட்கள் நாங்கள் அழுததால் அவர்கள் எங்களை விட்டுவிட்டுச் சென்றனர்.
3 ஆம் நாள் வந்து நீங்கள் கண்டிப்பாக வெளியே வரவேண்டும் என்று தெரிவித்தனர். நாங்கள் அழுதபடி வரமாட்டோம் என்று மீண்டும் கூறினோம். உடனே அவர்கள் துப்பாக்கியை காட்டி, வர வேண்டும், நாங்கள் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறோம் என்று தெரிவித்தனர். உடனே நாங்கள் வெளியே வந்ததும் எங்களை பஸ்சில் ஏற்ற ஆரம்பித்தனர்.
நாங்கள் பஸ்சில் ஏறிக்கொண்டு இருந்தபோது வெடிகுண்டு வெடித்தது. அப்போது கற்கள் மற்றும் கண்ணாடி சிதறல் எங்கள் மீது பட்டது. இதில் ஒரு சிலருக்கு தலை, மூக்கு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. மேலும் பலருக்கு கண்ணாடி சிதறல் பல இடங்களில் குத்தி காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் எங்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.
அவர்கள் எங்களை பஸ்சில் ஏற்றும்போது மிகவும் பயமாக இருந்தது. செல்லும் வழியில் அவர்கள் ஒவ்வொரு நிறுத்தமாக நிறுத்தும் போது, பெட்டியில் இருந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளை பார்த்து நாங்கள் பயந்து அலறினோம். உடனே உங்களை ஒன்றும் செய்யமாட்டோம், பாதுகாப்புக்காகத்தான் இவற்றை வைத்து உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எங்களை பஸ்சில் ஏற்றியதும் செல்போன் அனைத்தையும் சுவிட்-ஆப் செய்யுங்கள் என்று கூறினார்கள். ஆனால் பஸ்சில் போகும்போது பின்னால் இருந்தவர்கள் செல்போனை ஆன் செய்து தூதரக அதிகாரிகளிடம் பேசினார்கள். தூதரக அதிகாரிகள் ராணுவத்திடம் சொல்லி, நாங்கள் சென்ற பஸ்சை கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
நாங்கள் சென்ற அரை மணி நேரம் கழித்து, நாங்கள் இருந்த மருத்துவமனை தரைமட்டமாகி விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தீவிரவாதிகள் எங்களை மொசூலுக்கு அழைத்துச்சென்று குடோனில் தங்க வைத்தனர். எங்களை கூட்டிச்சென்ற போது அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மட்டும் தான் இருந்தனர். எங்களை அடைத்து வைத்த குடோனை பார்த்தபோது நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம். இனி இங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்று பயந்து போனோம்.
நாங்கள் அனைவரும் பெண்கள் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களிடம் அவர்கள் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டனர்.
எங்களை திட்டமிட்டே அந்த குடோனுக்கு அழைத்து வந்தது போன்று தெரிந்தது. நாங்கள் அவர்களிடம் எங்கள் பெற்றோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள். எங்களை எப்போது இந்தியாவுக்கு விடுவீர்கள் என்று கேட்டோம். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். உங்களை ஒன்றும் செய்யமாட்டோம். கண்டிப்பாக விட்டுவிடுவோம் என்று கூறினார்கள்.
மறுநாள் காலை வந்து நீங்கள் இந்தியாவுக்கு செல்லலாம். உங்கள் பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக இருங்கள் என்று தெரிவித்தனர். பின்பு எங்களை ஒரு பஸ்சில் ஏற்றிக்கொண்டு மொசூல் எல்லையில் கொண்டு வந்து விட்டுச்சென்றனர். அங்கிருந்து தூதரக அதிகாரிகள் எங்களை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அஜய்குமார் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் எங்களுக்கு நம்பிக்கை அளித்ததால்தான் ஒரு மாதமாக எங்களால் அங்கு இருக்க முடிந்தது. தூதரக அதிகாரிகளும், இந்திய அரசும் தான் நாங்கள் விடுதலையாக காரணமாக இருந்தனர்.