விளைச்சல் அதிகரி‌ப்பு - ச‌ரி‌ந்தது கோழிக்கொண்டை பூ விலை

புதன், 20 பிப்ரவரி 2013 (14:46 IST)
webdunia photo
WD
நடப்பு ஆண்டில் கோழிக்கொண்டை பூ அதிகமாக விளைந்ததால் அதன் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் ஆண்டு பயிரான கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்களின் இருந்து விவசாயிகள் மாறி தற்போது நாள்தோறும் வருமானம் கொடுக்கும் மல்லிகை, சம்பங்கி, கோழிக்கொண்டை என மலர் விவசாயத்திற்கு மாறிவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாயிகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஆண்டு பயிரில் இருந்து மாதபயிருக்கு மாறியதும் ஒரு முக்கிய காரணமாகும். தற்போது மல்லிகை மற்றும் சம்பங்கி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கனிசமான லாபம் கிடைந்து வருகிறது. காரணம் சீசன் நேரத்தில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1500 வரையிலும் ஒரு கிலோ சம்பங்கி ரூ. 500 வரையிலும் விற்பனையானது குறிப்பிடதக்கது.

ஆனால் கோழிக்கொண்டை பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து விலை சரிவால் நஷ்டத்தில் தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் கடந்த ஆண்டை காட்டிலும் கோழிக்கொண்டை பயிரிட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியும் அதிகரித்தது. உற்பத்தி அதிகரித்த காரணத்தால் அதன் விலை வீழ்ச்சியடைய தொடங்கியது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ கோழிக்கொண்டை பூ சராசரியாக ரூ.90 வரை விற்பனையானது. ஆனால் நடப்பு ஆண்டில் ஒரு கிலோ கோழிக்கொண்டை அதிகபட்சமாக ரூ. 30 வரை மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதனால் கோழிக்கொண்டை பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இது குறித்து கோழிக்கொண்டை பயிரிட்டுள்ள விவசாயி சிவக்குமார் கூறுகை‌யி‌ல், நடவு செய்யப்பட்ட 45 வது நாளில் இருந்து கோழிக்கொண்டை பலன் கொடுக்க தொடங்கிவிடும். 90 நாட்கள் வரை இது பலன்கொடுக்கும். தற்போது எங்குபார்த்தாலும் கோழிக்கொண்டை பயிரிட்டுள்ளனர். அதுவும் கடந்த ஆண்டைவிட எவ்வித நோய் தாக்குதல் இல்லாமல் விளைச்சலும் நன்றாக இருக்கிறது. ஆனால் அதற்குறிய விலையில்லாத காரணத்தால் கோழிக்கொண்டை பயிர் செய்துள்ள விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கையில் இருந்து கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குமுறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்