மறு எண்ணிக்கை அமைச்சர் என்பதா? - மோடி பேச்சுக்கு ப.சிதம்பரம் பதில்

திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:13 IST)
'மறு எண்ணிக்கை அமைச்சர்' என்று குறிப்பிட்ட நரேந்திர மோடிக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் ஒரு முறைதான் வாக்குகள் எண்ணப்பட்டதாக கூறி இருக்கிறார்.
FILE

நேற்று முன்தினம் சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். கடந்த தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை மூலம் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக கூறும் வகையில், 'மறு எண்ணிக்கை அமைச்சர்' என்றும் சிதம்பரம் பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போலி என்கவுன்ட்டரில் உண்மையை கொல்வதே நரேந்திர மோடியின் வழக்கம் என்று நான் ஒரு முறை கூறினேன். எத்தனை உண்மைகளை மோடி சிதைத்தார் என்பதற்கு பல உதாரணங்களை சொல்லியிருந்தேன். இப்போது மோடியின் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் இன்னொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

'மறு எண்ணிக்கை அமைச்சர்' என்று மோடி என்னை கிண்டல் செய்திருக்கிறார். 2009-ல் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் ஒரு முறைதான் வாக்குகள் எண்ணப்பட்டன. மறு எண்ணிக்கை நடைபெறவில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் 'என்னுடைய மறு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தது தவறு' என்பது தான் அ.தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்று. இந்த உண்மையைத்தான் மோடி சிதைத்திருக்கிறார். இன்னும் எத்தனை உண்மைகளை சிதைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்