மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம் - கருணாநிதி

Ilavarasan

செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (12:50 IST)
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் மதச் சார்பற்ற ஆட்சி அமைக்க யார் அழைத்தாலும், அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.
 
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் செ.உமாராணி (சேலம்), செ.காந்திசெல்வன் (நாமக்கல்), ஆர்.தாமரைச்செல்வன் (தருமபுரி), ஆர்.மணிமாறன் (கள்ளக்குறிச்சி) ஆகியோரை ஆதரித்து கருணாநிதி பேசியது:
 
தமிழகத்தில் சிலர் கருணாநிதி தனியாக நிற்கிறார், அரசியல் கட்சிகள் அவரைக் கைவிட்டு விட்டன என்கின்றனர். "கை' தான் என்னை விட்டு விட்டது என்றாலும், யாரும் என்னைக் கைவிடவில்லை, கைவிடவும் முடியாது.
 
"கை' சின்னம் என்னுடன் இல்லை என்பதாலேயே நான் கைவிடப்பட்டதாகக் கூறக் கூடாது.
 
எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச் சார்பின்மை என்ற வார்த்தைக்கு பொருள் இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. சமுதாயத்தில் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு, வேறு  வழியில்லாமல் சென்றாலும், திமுக ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றும்.
 
அடித்தட்டு மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளைத் தொடர வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக மதச் சார்பற்ற முறையில் ஒரு ஆட்சி நடைபெற யார் "கை' கொடுத்தாலும் அந்தக் கையைக் குலுக்கி வரவேற்போம்.
 
அதற்காக திமுகவின் தலையாய கொள்கைகளான சாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளை, பெரியார், அண்ணா உருவாக்கிக் கொடுத்த லட்சியங்களை நாங்கள் கைவிட மாட்டோம்.
 
சிறுபான்மையினருக்கு யார் உதவ முன் வருகின்றனரோ, யார் தோழமையுடன் உள்ளனரோ அவர்களுடன்தான் இனிவரும் காலத்தில் உறவு அமையும். இப்போது உள்ள ஆட்சியாளர்கள் சிறுபான்மையினருக்கு நாங்கள் வேண்டியவர்கள் என்று நாடகமாடினாலும், அதை நம்ப மக்கள் தயாராக இல்லை. சிறுபான்மையினரும் அதை ஏற்கத் தயாராக இல்லை என்றார் கருணாநிதி.
 
திமுக துணைப் பொதுச் செயலர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், முத்துசாமி, டி.எம்.செல்வகணபதி, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்