பொறியியல் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு: ஜூலை 5ல் கலந்தாய்வு

வியாழன், 25 ஜூன் 2009 (11:32 IST)
பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5ம் தேதி தொடங்க உள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை சேர்த்து சுமார் 85 ஆயிரம் இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 11 மணிக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கே.கணேசன், துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் ஆகியோர் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்