பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

புதன், 22 பிப்ரவரி 2012 (23:10 IST)
தொழில்கல்வி மாணவர் சேர்க்கையில் பொதுத்தேர்வு முறையை ஆதரிக்க முடியாது என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் உறுதிபடத் தெரிவித்தார்.

டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாடு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய கல்வித்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன், பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி உள்பட பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், "தொழில்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது. இதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன.

பொது நுழைவுத்தேர்வால், கிராமப்புறங்களில் வசிக்கும் சமூகத்தின் பின்தங்கிய நிலையில் வாழும் மாணவர்கள், தமிழ் மொழி வாயிலாக கல்வி பயின்றவர்கள் போன்றோருக்கு எந்தப் பலனும் இல்லை.

பொது நுழைவுத்தேர்வின்படி பொறியியல் கல்லூரிகளில் 2005-ம் ஆண்டில் 56.72 சதவீதமும், 2006-ம் ஆண்டில் 58.26 சதவீத மாணவர்களும்தான் சேர்ந்துள்ளனர்.

பொது நுழைவுத்தேர்வு முறை நீக்கப்பட்ட பிறகு, தொழில்கல்விகளில் 68.79 சதவீத மாணவர்கள் சேர்ந்தனர். அதனால்தான் பொது நுழைவுத்தேர்வு முறைக்கு தமிழக முதல்வர் ஆதரவாக இல்லை” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்