பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க காவல்துறையில் தனிப்படை

வியாழன், 2 மே 2013 (20:33 IST)
FILE
இணையதளத்தில் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க காவல்துறையில் இணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் இணையதளத்தில் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை பயன்படுத்துகின்றனர். கம்ப்யூட்டரில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இணையதளங்கள், இப்போது செல்போனுக்கும் வந்த பிறகு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த இணையதள பக்கங்களை சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக அவ்வப்போது காவல்துறையினருக்கு புகார்களும் வருகிறது. இதனால் சென்னை காவல்துறை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், நேற்று காலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க இணை ஆணையர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்தபோது, சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்தோம். செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம். எஸ்எம்எஸ் கொடுத்தாலும் காவல்துறையினர் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். இதனால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், இனி பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை நாங்கள் கண்காணிப்போம். அதில் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்வோம். அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு குறிப்பிட்ட பேஸ்புக் முகவரியை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்