பிளஸ் 2 தொழில் பாடத்தை அரசு ரத்து செய்தது செல்லு‌‌ம்: உயர் நீதிமன்றம்

செவ்வாய், 14 ஜூலை 2009 (10:45 IST)
''அரசு பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவான சேர்க்கை உள்ள பிளஸ் 2 தொழில் பாடப் பிரிவை ரத்து செய்யும் அரசாணை செல்லும்'' என்று செ‌ன்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செந்தாமரை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு‌வி‌ல், தமிழக மேல்நிலைப் பள்ளிகளில், 1978ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 தொழில்பாட படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக 2007ஆம் ஆண்டு கமிட்டி அமைக்கப்பட்டு புதிய பாடத் திட்டமும் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில் படிப்பு பிரிவில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால், அந்த பள்ளியில் இருந்து அந்த படிப்பையே நீக்கிவிட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சட்ட விரோதமானது.

தொழில் படிப்பின் வளர்ச்சியை பார்க்காமல் 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இத்தகைய பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் கிராம‌ப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூறியிருந்தார்.

இந்த மனுவை, தலைமை நீதிபதி ஹேமந்த் லட்சுமண் கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு வழ‌க்க‌றிஞ‌ர் சங்கரன் ஆஜராகி, ''குறைவான மாணவர்களை வைத்து வகுப்பு நடத்தினால் அரசுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே, 15 மாணவர்களுக்கு குறைவாக சேரும் பாடப் பிரிவை நீக்க அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது சரியானதுதான். இதற்கு தடை விதிக்க கூடாது'' என்றார்.

இதை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட நீதிபதிகள், ''அரசாணையை ரத்து செய்ய முடியாது எ‌ன்று‌ம் இது தொட‌ர்பாக அரசு ‌பிற‌ப்‌பி‌த்த உத்தரவு செல்லும் எ‌ன்று‌ம் கூ‌றி வழக்கை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்