பாமக நிர்வாகி வீட்டில் ரூ.50.6 லட்சம் பறிமுதல்

புதன், 23 ஏப்ரல் 2014 (10:56 IST)
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தினார்கள். பாமக நிர்வாகி வீட்டில் ரூ.50.6 லட்சம் சிக்கியது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனைப்பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி அணைக்கட்டு ஒன்றிய பாமக தலைவராக உள்ளார். அவரது வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதுபற்றி குப்புசாமியிடம் கேட்டபோது, இந்த பணம் வாக்குச்சாவடி செலவுக்கு பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னுவிடம் ஒப்படைத்தனர்.
 
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வார்கள் என்று ஆட்சியர் கூறினார்.
 
தர்மபுரி தொகுதியை சேர்ந்த மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தேர்தல் பிரிவின் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே பறக்கும்படை குழுவினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது சிலர் கவர்களில் வாக்காளர் பெயர்களை எழுதி அதில் பணத்தை போட்டுக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
 
இதையொட்டி அவர்களிடம் இருந்த பணம் ரூ.60 ஆயிரம் மற்றும் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வீரக்கல்புதூர் பேரூராட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் சதாசிவம்(வயது 40), சீரங்கன்(58) ஆகியோர் மேட்டூர் உதவி ஆட்சியர் அனீஷ்சேகர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கருமலைக்கூடல் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். 
 
அப்போது சண்முகசுந்தரம் செட்டியார் என்பவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பெருமகளூர் நகர அதிமுகவை சேர்ந்த கோவிந்தராசு, வெள்ளைச்சாமி, சந்திரசேகரன் ஆகிய 3 பேரும் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அவர்களை ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் பிடித்து பேராவூரணி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வாண்டையார்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு ஒரு அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. 
 
அதன்பேரில் பறக்கும் படையினர் வாண்டையார்பாளையத்துக்கு விரைந்து சென்று, ராசாப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்ற வாலிபரை பிடித்து, அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணி அளவிலும் குறிஞ்சிப்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பறக்கும் படையினர், 13 ஆயிரத்து 300 ரூபாயை ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
 
இது தொடர்பாக ஆட்சியர் கிர்லோஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து இதுவரை 3 கோடியே 83 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தாக 8-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராமசாமி, பாசறை செயலாளர் ஆகியோரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டது.
 
ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக கிளை செயலாளர் பால்ராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவில் பணம் கொடுத்ததாக அதிமுக பிரமுகர் சன்னாசியும், சிங்கராஜபுரம் பகுதியில் பணம் வினியோகம் செய்த அதிமுக பிரமுகர் ஈஸ்வரன், மயிலாடும்பாளை பஸ் நிறுத்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக பிரமுகர் மணிகண்டன், கூடலூர் நகராட்சி 4-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கருப்பையா ஆகியோரும் கைதானார்கள்.
 
ஈரோடு மாவட்டம் பெரியவலசு மாரியம்மன் கோவில் அருகே பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு 2 பேரும் தப்பி ஓடினார்கள். அந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் சோதனை செய்த போது பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.25 ஆயிரமும் இரட்டை இலை சின்னம் பொறித்த பூத் சிலிப்பும் இருந்தது அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
விழுப்புரம் மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் நேற்று இரவு பாமகவினர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரவு 11.30 மணி அளவில் அதிமுக நிர்வாகிகள் மாதவச்சேரி கிராமத்தில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். இதுபற்றி பாமகவினர் கொடுத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
 
தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அதிமுக-பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாமகவை சேர்ந்த ராமச்சந்திரன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர் 8 பேர் மீதும், பாமகவினர் 6 பேர் உள்பட 14 பேர் மீது கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
 
நல்லாத்தூர் கிராமத்தில் அதிமுகவினர் பணம் கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது ஒரு கும்பல் தங்களிடம் இருந்த ஆயிரம் ரூபாயை கீழே போட்டுவிட்டு தப்பியது.
 
திருவள்ளூர் மாவட்டம் டி.ஜி.என். கண்டிகை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது30) என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த டீனு (25) சென்று தனக்கு தேர்தல் பணம் வரவில்லை என கேட்டார். அப்போது இருவரது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் பாக்கியராஜ் (26), கோபி(27) ஆகியோர் காயம் அடைந்தனர்.
 
இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த டீனு, திபு, மது, முரளி, சுப்பிரமணி, ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்