பாடபுத்தகங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

ஞாயிறு, 1 ஜூலை 2012 (12:11 IST)
பாடபுத்தகங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாடநூல் கழகம்

தமிழ்நாட்டு பாடநூல் கழகம் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேவையையும் நலனையும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு தேவையான விலையில்லா மற்றும் விற்பனை பாடநூல்களை பள்ளிகள் திறக்கும் முன்னரே அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டது அடுத்த கட்டமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடநூல்களை பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் கிடைத்திடும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இறுதிக்கட்டமாக 11-ம் வகுப்பு இலவச பாடநூல்கள் அச்சகங்களில் இருந்து நேரடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இதுவரை சென்னை தலைமை அலுவலகத்தில் மட்டும் சிறப்பு விற்பனை மையங்கள் மூலம் பாடநூல் சில்லரை விற்பனை நடந்து வந்தது. வெளிïரிலிருந்து பாடநூல்களை பெற பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், பர்கூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், மானாமதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் சிவகாசி வட்டார அலுவலகங்களில் அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்கள் நேரடியாக சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகள் தாமாக முன்வந்து பாடநூல்களை வாங்கித்தராததால் பாடநூல்கள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் மேற்கண்ட வட்டார அலுவலகங்களில் நேரில் சென்று ரொக்கம் செலுத்தி பாடநூல்களை பெற்றுக்கொள்ளலாம்.

சில்லரை விற்பனையாளர்கள் பாடநூல்களை அதிக விலைக்கு விற்றாலோ வழிகாட்டி கைடுகளை வாங்க வற்புறுத்தினாலோ அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்