பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளை ஒதுக்காவிட்டால் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டி - பாரிவேந்தர் அறிவிப்பு

செவ்வாய், 11 மார்ச் 2014 (11:42 IST)
"பா.ஜ.க. கூட்டணியில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கினால்தான் சேர்ந்து போட்டி" என்றும் இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம் என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
FILE

இதுகுறித்து, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் நேற்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கை பெங்களூரில் சந்தித்தேன். அப்போது இந்திய ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் முதலில் 7 தொகுதிகள் வேண்டுமென்றும், அதை கொடுப்பதில் ஏதும் சிரமம் இருந்தால் குறைந்த பட்சம் 3 தொகுதிகள் வேண்டுமென்றும், அந்த தொகுதிகள் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி என்பதாக இருக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தேன்.

அதிலும், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தால் 2 தொகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும், அந்த 2 தொகுதிகள் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் என்று வலியுறுத்தி இருந்தேன். அவரும் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசுவதாகவும், ‘நான் பேசியபிறகு பொன்.ராதாகிருஷ்ணன் என்னிடம் பேசுவார்’ என்றும் கூறினார்.

நாங்கள் தனிச்சின்னத்தில் தான் நிற்போம். இந்த தொகுதிகளை தராமல் நாங்கள் தனித்து நிற்கும் சூழ்நிலையை பா.ஜ.க. உருவாக்காது என்று நம்புகிறோம். தமிழக பா.ஜ.க. தோழமைகளில் மூத்தகட்சி இந்திய ஜனநாயக கட்சியாகும். சமீபத்தில் வண்டலூரில் பா.ஜ.க. மாநாடு நடத்தியதில் பெரும்பங்கு வகித்தது இந்திய ஜனநாயக கட்சியே. இது அவர்களுக்கும் தெரியும்.

நாங்கள் கேட்கும் 2 தொகுதிகளை கொடுத்தால், கூட்டணியில் போட்டியிடுவோம். இல்லையேல், தனித்து போட்டி போடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்