பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் - பிரகாஷ் காரத்

Ilavarasan

திங்கள், 14 ஏப்ரல் 2014 (10:46 IST)
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி உறுதியாகி விட்டது; பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிராகஷ் காரத் கூறினார்.
 
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து பேகம்பூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:
 
16 ஆவது மக்களவைக்கு, தற்போது 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதியாகி விட்டது. காங்கிரஸ் செயல்படுத்திய தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுதான், அதற்கு முக்கியக் காரணம்.
 
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லையால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் ஏற்பட்டுள்ளது.
 
வரலாறு காணாத அளவில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதனால் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் அகற்றப்படுவது உறுதியாகிவிட்டது.
 
காங்கிரசுக்கு மாற்று பாஜக கிடையாது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூலம் பாஜக வழிநடத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் சார்பில்தான், நரேந்திர மோடி பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதன் மூலம் இந்துத்துவா கொள்கைகளை, நாடு முழுவதும் பரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் பாஜகவும், நரேந்திர மோடியும் தோல்வி அடைய வேண்டும். அதற்கான முயற்சிகளை இடதுசாரி கட்சிகள் மேற்கொண்டு வருகிறது.
 
தமிழகத்தில் உள்ள திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சமீப காலம் வரை அங்கம் வகித்த கட்சியாகும். மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்திய காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தனர்.
 
ஊழல் புகாரில் தொடர்புடைய திமுக, தேர்தலுக்குப் பின் காங்கிரசை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும். மறுபுறம் பாஜகவை விமர்சனம் செய்யாமல் அதிமுக மௌனித்து வருகிறது. மாறாக காங்கிரசை மட்டும் கடுமையாக விமர்சித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது. அதே நேரம் பாஜகவும் வெற்றி பெறக்கூடாது. மதச் சார்பற்ற, உழைக்கும் மக்களுக்கு ஆதரவான, மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோரின் நலனுக்காக பாடுபட்டு வரும் இடதுசாரி கட்சிகளுக்கு, மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் முதன்முறையாக தனியாக தேர்தல் களத்தில் நிற்கும் இடதுசாரிகளுக்கு, மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன் என்று பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்