பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!

ஞாயிறு, 9 அக்டோபர் 2011 (16:29 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இன்று நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் இன்று நடந்தது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ஆர்., டாக்டர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்றது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணை தலைவர்கள் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும் செயலாளர்கள் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.என். தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிட்டனர். கே.ஆர். அணியில் துணை தலைவர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், டி.சிவா ஆகியோரும், செயலாளர் பதவிக்கு முரளிதரன், ஏ.எம்.ரத்தினம் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு அன்பாலாயா பிரபாகரனும் போட்டியிட்டனர்.

மேலும் 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 42 பேர் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது.தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வாசலில் இரு அணிகளை சேர்ந்தவர்களும் நின்று கொண்டு வாக்கு கேட்டனர். இதனால் லேசான கூச்சலும், பரபரப்பும் நிலவியது.

நடிகர்கள் ராதாரவி, பிரகாஷ்ராஜ், நாசர், சரவணன், சின்னிஜெயந்த், துஷ்யந்தன், டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், சேரன், எஸ்.ஏ.சூர்யா, டி.ராஜேந்தர், திருமலை, நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் வாக்களித்தனர்.

தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் ராம. நாராயணன், எல்.கே. சுதீஷ், நடிகை ராதிகா, வி.சி.குகநாதன், சிவசக்தி பாண்டியன், ஏ.வி.எம். பால சுப்பிரமணியம், ஆர்.பி.சவுத்திரி, கே.பி. குஞ்சு மேனன், கே.ராஜன், ஜெயச் சித்ரா, பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் வாக்களித்தார்கள்.

ஓட்டுப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க கூட்டங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இன்றைய தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்