நீலகிரி பாஜக வேட்பாளரின் அவசர மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (16:20 IST)
நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தொடரப்பட்டது. ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
BJP started its losing count
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு வழக்கறிஞர் டி.வி.கிருஷ்ணமாச்சாரி ஆஜராகி செய்த வாதத்தில் கூறியதாவது:-
 
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில், பாஜக சார்பில் குருமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அன்பரசு என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 
இவர்கள் இருவரும், பாஜகவின் அங்கீகார கடிதத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தை கூறி, இருவரது வேட்புமனுவையும் மாவட்ட தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன். அந்த வழக்கை, அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
 
இவரது வாதத்துக்கு, தேர்தல் ஆணையத்தின் தரப்பு கருத்தை நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், ‘ஏற்கனவே வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’ என்று கூறினார்.
 
அதற்கு வழக்கறிஞர் டி.வி.கிருஷ்ணமாச்சாரி, ‘அரசியல் கட்சி அங்கீகார கடிதத்தை மறுநாள் கூட கொடுக்கலாம். ஆனால், அந்த ஒரு காரணத்தை கூறி வேட்புமனுவை நிராகரித்துவிட்டனர்’ என்று கூறினார்.
 
இதையடுத்து நீதிபதிகள், ‘உடனடியாக வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அதேநேரம், தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தேர்தல் வழக்கு தொடரலாம். அந்த மனுவை நாளையோ அல்லது நாளை மறுநாளோ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்