திமுக முன்னாள் மந்திரி அதிமுகவில் இணைந்தார்

திங்கள், 2 செப்டம்பர் 2013 (18:05 IST)
FILE
திமுக முன்னாள் மந்திரி கோமதி சீனிவாசன் அதிமுகவில் இணைந்தார். மேலும் பாமக முன்னாள் தலைவர் தீரனும் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று பட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரும், பசுமை தமிழகம் அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் தீரன் என்ற ராஜேந்திரன் மகன் குட்டிமணியுடன் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் உடன் இருந்தார்.

திமுகவைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் வழக்கறிஞர் எம். பட்டுராஜன்; மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி மு. மாயாண்டி ஆகியோர் முதலமைச்சரை தனித் தனியே நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ உடன் இருந்தார்.

முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், தனது கணவர் சீனிவாசனுடன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, திமுகவில் இருந்து விலகி தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

பிரபல இசைக் கலைஞர் அனிதா குப்புசாமி முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன், மனைவி விஜயா, மகன் ஸ்ரீவத்ஸன் ஆகியோருடன் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்