தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த பரிசீலனை

திங்கள், 10 பிப்ரவரி 2014 (11:13 IST)
FILE
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத், நேற்று சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி குறித்து இந்த மாதம் இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.சி.சம்பத், பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அவர் சென்னை வந்தார்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

பின்னர் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம், வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) நடத்தப்படும்.

அதன்பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டுசெல்வது குறித்து ரெயில்வே துறையிடமும், தகவல் பரிமாற்றம் குறித்து பி.எஸ். என்.எல் நிறுவனத்திடமும் ஆலோசனை நடத்தப்படும்.

இதுபோன்ற கூட்டங்களில், தேர்தல் நடத்தும் நடைமுறைகள், வாக்குச்சாவடியில் செய்து தரப்பட வேண்டிய வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, உள்ளிட்ட அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்படும். அதன்பின்னர் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அகில இந்திய அளவில் கடந்த 4-ந்தேதி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் நாடு முழுவதும் எந்த தேதியில், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் உள்ளடி.ஜி.பி.யின் (ராமானுஜம்) பதவிகால நீட்டிப்பு குறித்தும், அவரை தேர்தல் பணிக்கு அனுமதிக்க கூடாது என்றும், ஒரு கட்சி (தி.மு.க.) சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம். விரைவில் அது குறித்து முடிவு செய்யப்படும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்படும்.

தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த ஜனவரி 10-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் புதிய வாக்காளர்களாக 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட சரிபார்ப்பு பணியின் அடிப்படையில் 10 லட்சம் பேர், முகவரி இல்லை என்ற காரணத்துக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இவர்களை போலி வாக்காளர்கள் என்று கூறி விட முடியாது. ஏனென்றால் பலர் இடம் மாறி சென்று இருக்கலாம். பலர் வாடகை வீடுகள் மாறி இருக்கலாம். என்றாலும், பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் முகவரி சம்பந்தபட்ட ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

கடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இனி இதற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால் அனைத்து வாக்காளர்களுக் கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குசாவடி சீட்டு (பூத் சிலிப்) கொடுத்துவிடுவோம். அதை வைத்தோ அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வைத்தோ ஓட்டு போட முடியும்” என்று சம்பத் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்