ஜூன்.12 வரை காடுவெட்டி குருவிற்கு காவல் நீட்டிப்பு

வியாழன், 30 மே 2013 (14:46 IST)
FILE
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கி செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் நீதிமன்றங்கள் புதன்கிழமை உத்தரவிட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அருகே பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் 2012 ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடந்த பாமக கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, வன்னியர் சங்கத் தலைவரும் பாமக சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு மீது தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் இருந்த குருவை காஞ்சிபுரம் மாவட்டப் காவல்துறை ஏப்ரல் 30 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுதவிர கடந்த 2012, 2013 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க பெருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசியது உள்பட 3 வழக்குகளில் குருவை மாமல்லபுரம் காவல்துறையினர் கைது செய்து திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில், கடந்த மே 10 ஆம் தேதி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சென்னை புழல் சிறையில் குரு அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் காடுவெட்டி குருவை காவல்த்றையினர் கடந்த மே 17 ஆம் தேதி மீண்டும் திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது குருவிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், மே 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி புதன்கிழமை குருவை காவல்துறையினர் திருக்கழுகுன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவரது காவலை வரும் ஜூன் 12 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

பாமக தலைவர் ஜி.கே.மணி, திருக்கழுகுன்றம் நீதிமன்ற நீதிபதி சிவா அனுமதியுடன் குருவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 5 நிமிடம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்