சென்னையில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வந்தது

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (09:28 IST)
FILE
மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று முதல் 2 மணி நேர மின்தடை அமலுக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி அனல் மின்சார நிலையத்தில் 400 மெகாவாட் உற்பத்தி செய்யும் அலகு, வடசென்னை அனல்மின்சார நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் மற்றும் வல்லூர் அனல் மின்சார நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அலகுகளில் ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்சார நிலையத்திலும் 956 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி குறைந்து உள்ளது. தொடர்ந்து கியாஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட்டிலும் 301 மெகாவாட் மற்றும் காற்றாலை சீசன் முடிவடைந்ததால் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.

வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் 10 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் சராசரியாக தேவைப்படுகிறது. மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஒரே சமயம் பழுது ஏற்பட்டுள்ளதால், மின்சார உற்பத்தி குறைந்ததுடன், மொத்த உற்பத்தியும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மின்சாரம் தயாரிக்க தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றிற்கு கடுமையாக தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், 1,500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சராசரியாக 1,500 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மணிக்கணக்கில் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு நேற்றிலிருந்து 2 மணிநேரம் மின்சார நிறுத்தம் முறை அமலுக்கு வந்தது. காலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் வீடுகளில் சமையல் செய்வது, துணிகளை இஸ்திரி செய்வது, தண்ணீர் மோட்டார் போடுவது போன்ற அத்தியாவசிய பணிகள் தடைப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடையும் தற்போது அமலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்