செந்தூர் எக்ஸ்பிரஸ்: லாலு தொடங்கி வைத்தார்

ஞாயிறு, 8 பிப்ரவரி 2009 (13:38 IST)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயிலை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தலைமை தாங்கினார்.

மாநில அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், கீதாஜீவன், நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி. உட்பட பலர் பங்கேற்றனர்.

திருச்செந்தூரில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 7-15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னையை அடையும்.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் மணி 3- 40-க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் சனிக்கிழமை திருச்செந்தூரை அடையும். இதில் மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இதில் படுக்கைவசதி கொண்ட பெட்டிகள் -4, ஏ.சி. பெட்டிகள்-2, பொது பெட்டிகள்- 6, பாதுகாப்பாளர் பெட்டிகள் -2. பொதுவாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3 பொது பெட்டிகளே இணைக்கப்பட்டிருக்கும்.

செந்தூர் எக்ஸ்பிரசில் 6 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழாவுக்காக விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முகப்பில் 2 குத்துவிளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்