சமச்சீர் கல்வி: தங்கம் தென்னரசு விளக்கம்

சனி, 3 அக்டோபர் 2009 (12:45 IST)
சென்னை: சமச்சீர் கல்வியில் பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2010-2011) முதல் வகுப்பிலும்-ஆறாம் வகுப்பிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடங்கப்படும் என்று 26.8.2009 அன்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சமச்சீர் கல்வியினை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டப் பணிகளை கலந்தாய்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பாடத் திட்டங்கள் வகுக்கும் பணியைப் பற்றி மட்டும் ஆய்வு செய்யப்பட்டது. பாடத்திட்டம் தயாரிக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் 5 அல்லது 6 நாட்களில் வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, பள்ளி கல்வியின் இணையதளத்தில் வெளியிடப்படும். வரைவு பாடத்திட்டத்தைப் பற்றிய கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படும்.

அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று நான் சொன்னதாக ஒருசில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்படி வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானதும்; சமச்சீர் கல்வி தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை திரித்துக் கூறுவதும் ஆகும்.

26.8.2009 அன்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தபடி பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வேண்டும். தற்போது உள்ள அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒருபொது கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்;

வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் செயல்படுத்தப்படவுள்ள பொதுப்பாடத்திட்டம் மற்றும் பாட நூல்கள் தொடர்ந்து 2011-2012-ம் ஆண்டில் பிற வகுப்புகளுக்கும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுகளே, சமச்சீர் கல்வியைப் பொருத்தவரை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முடிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்