சமச்சீர் கல்வி: கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

செவ்வாய், 21 ஜூன் 2011 (12:12 IST)
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படத்த வலியுறுத்தி தஞ்சை மற்றும் குமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உடனடியாக சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரியும் தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கரிகாலன், சமச்சீர் கல்வியை தமிழக அரசு இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். அதைப்போல் சமச்சீர் கல்வி பாடத்திட்ட நிபுணர் குழுவில் இருக்கும் தனியார் பள்ளிகளின் முதலாளிகளை வாபஸ் பெற வேண்டும்.

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளையை அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. கட்டண கொள்ளையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.

இதேபோல் நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்