சட்டக்கல்லூரி விடுதிக் கட்டிடம் இடிப்பு

வியாழன், 1 ஜனவரி 2009 (16:13 IST)
சென்னை மில்லர்ஸ் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி, பாழடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது.

இந்த விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதி பாழடைந்து மாணவர்கள் தங்க முடியாத நிலையில் இருந்தது. மேலும், மழை காலத்தில் இங்கு தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இதையடுத்து, சமீபத்தில் இந்த விடுதியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு அதனை மாணவர்கள் பொழுதுபோக்கு வசதிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க உத்தரவிட்டார்.

அரசு சட்டக்கல்லூரி வருகிற 19ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதற்குள் விடுதிக் கட்டிடத்தை முழுமையாக இடித்து பணிகளை முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு விடுதி மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்