சசிகலா கணவர் நடராஜன் கைது

சனி, 18 பிப்ரவரி 2012 (20:28 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த நிலமோசடி புகாரின் பேரில், தஞ்சை போலீசார் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடராஜனின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து அழைத்து சென்றதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர் ராவணன் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேறியதிலிருந்தே இத்தகைய கைதுகள் எதிர்பார்க்கப்பட்டதால், நடராஜன் கைது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.

திவாகரன், இராவணன் மீது பணமோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும்,பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா சாட்சியம் அளிக்கையில் ஜெயலலிதாவை மாட்டிவிடும் வைகையில் ஏதாவது பதிலளித்துவிடக் கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை நடவடிக்கையே இது என்று அதிமுக உள்வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்புக்கேற்பவே சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், வங்கி கணக்கு வழக்குகளை தாமே கையாண்டதாகவும், அவருக்கு எதுவும் தெரியாது என்றும், குற்றமற்றவர் என்றும் கூறியிருந்தார்.மேலும் இவ்வாறு கூறுகையில் அவர் நீதிபதி முன்னர் கதறி அழுததாகவும் தகவல்கள் வெளியாகின.

அப்படி இருந்தும் நடராஜன் இன்று கைது செய்யப்பட்டிருப்பது,நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கையில் வேறு ஏதேனும் தகிடுதத்தங்கள் அரங்கேறி,அது குறித்த தகவல் ஜெயலலிதாவுக்கு எட்டி, அங்கிருந்த வந்த உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

மற்றொரு தகவலோ, இடைத்தேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அத்தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளை அதிமுகவுக்கு விழசெய்யாமல் இருப்பதற்காக 'சசி பேரவை'என்ற ஒரு அமைப்பை நடராஜன், தமக்கு நெருக்கமான நபர் ஒருவர் மூலம் தொடங்குமாறு சிக்னல் காட்டியதாகவும், இது குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்தே, அதற்கு "செக்" வைக்கும் நோக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்