கலவரக்காடான சத்தியமூர்த்தி பவன்; தமிழர் அமைப்புகள் - காங்கிரசார் பயங்கர மோதல்

வியாழன், 27 பிப்ரவரி 2014 (12:53 IST)
சத்தியமூர்த்தி பவனை தமிழர் அமைப்புகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இதனால் ஏற்பட்ட மோதல், கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
FILE

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் எழுந்துள்ள பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பகல் 11 மணியளவில் அண்ணாசாலையும், ஜி.பி.ரோடும் இணையும் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கையில் கட்சி கொடியுடன் திரண்டனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சத்தியமூர்த்தி பவனை நோக்கி வேகமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.

இதற்கிடையே போராட்டக்காரர்களில் சிலர் சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். அந்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ராகுல்காந்தி, சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிரந்தரமாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். பின்னர் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவன் முன்பு அமர்ந்து கொண்டனர்.
FILE

அப்போது திடீரென்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் கோஷங்கள் எழுப்பியபடி காவல்துறையினரையும் தாண்டி சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்தனர். இதைப்பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் 5 பேரையும் அடித்து, நொறுக்கி, இழுத்துச்சென்றனர். காங்கிரஸ் தொண்டர்களிடம் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் மீட்டு, காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்ல முற்பட்டனர்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். சற்று நேரத்தில், தமிழர் முன்னேற்றப்படையை சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தலைமையில் 300 பேர் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்தது.

அவர்கள் காங்கிரஸ் கட்சியினர் மீது கற்களை வீசினார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியினர் பதிலுக்கு, தங்கள் மீது எறியப்பட்ட கற்களை எடுத்து போராட்டக்காரர்கள் மீது வீசினர். இதனால் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. மோதல் வலுக்கவே, சத்தியமூர்த்தி பவன் முன்பு கூடுதலாக போலீஸ் படை இறக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் காவலர் ஒருவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
FILE

இதை தொடர்ந்து காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் போராட்டக்காரர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே, சத்தியமூர்த்தி பவனில் சாலையில் நின்றிருந்த ஒரு சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டை சைக்கிள் மீது எரிந்தார்களா? அல்லது தீயிட்டு கொளுத்தினார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். போராட்டத்தின் காரணமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் வன்முறையில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப்படையை சேர்ந்த 300 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்