கணவனும், மனைவி தனித்தனியாக எரிவாயு இணைப்பு பெறலாம்: மதுரை உயர் நீதிமன்றம்

வெள்ளி, 9 அக்டோபர் 2009 (09:57 IST)
ஒரே குடும்பத்தில் உள்ள கணவன்-மனைவி தனித் தனியே எரிவாயு இணைப்பு பெறலாம் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 1976ஆம் ஆண்டு முதல் எரிவாயு இணைப்பு வைத்திருந்தேன். எனது பெயரில் வேறு இணைப்பு எதுவும் கிடையாது. எனது மனைவி பெயரில் இணைப்பு இருப்பதாக கூறி எனது பெயரில் இருந்த எரிவாயு இணைப்பை கடந்த 2007ஆம் ஆண்டு அதிகாரிகள் துண்டித்தனர். அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, “ஒரு குடும்பத்துக்கு ஒரு எரிவாயு இணைப்புதான் அளிக்கப்பட வேண்டும். ஒரே வீட்டில் கணவன், மனைவி இருந்தால் யாருக்காவது ஒருவருக்கு மட்டுமே இணைப்பு அளிக்கப்பட வேண்டும். மனுதாரர் தனது எரிவாயு இணைப்பை சரண்டர் செய்து விட்டு தனது மனைவி பெயரில் உள்ள கியாஸ் இணைப்பில் கூடுதல் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும” என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாரியப்பன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைச்சாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, கியாஸ் நிறுவன அதிகாரிகள் பதில் மனுவில், “ஒரே வீட்டில் வசிக்கும் கணவன், மனைவிக்கு தனித்தனி கியாஸ் இணைப்பு கொடுக்கப்பட்டால் தவறாக பயன்படுத்த (கார்களுக்கு உபயோகப்படுத்துவது) வாய்ப்பு உள்ளது. எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசால் மானியம் அளிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் 2 இணைப்பு பெறுவது மானியத்தை தவறாக பயன்படுத்துவது போன்றதாகும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “இந்த வழக்கைப் பொறுத்தவரை எரிவாயு இணைப்பு பெறுவது தொடர்பான அரசின் வழிகாட்டுதலில் நபர் என்றால் தனிநபர் அல்லது நிறுவனம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர், நிறுவனங்கள் பெயரில் எரிவாயு இணைப்பு பெறலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பம் என்று எதுவும் கூறப்படவில்லை.

குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனி நபர் ஆவர். எனவே அவர்கள் தனித்தனி எரிவாயு இணைப்பு பெற தகுதியானவர்கள். அரசின் வழிகாட்டுதலில் நபர் என்றால் குடும்பம் என்று கூறப்படாத பட்சத்தில் தனிநபர் பெயரில் கியாஸ் இணைப்பு வைத்து இருப்பதை தவறு என்று கூறமுடியாது.

எரிவாயு சிலிண்டர்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமே தவிர அந்த காரணத்தை சுட்டிக்காட்டி ஒரே குடும்பத்தில் வசிப்பவர்களுக்கு தனித்தனியாக இணைப்பு தர மறுக்கக்கூடாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறத” எனத் தீர்ப்பளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்