கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் மீட்பு

ஞாயிறு, 4 செப்டம்பர் 2011 (16:05 IST)
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட, சிவகாசி அருகே உள்ள எஸ்.என்.புரத்தைச் சேர்ந்த மாணவன் கோடீஸ்வரனை காவல்துறை மீட்டுள்ளனர்.

கடந்த 30 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவன் கோடீஸ்வரன் வீடு திரும்பததையடுத்து, அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு எரிச்சநத்தத்தில் இருப்பதாக மாணவன் கோடீஸ்வரன் ஃபோன் செய்ததையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அவனை மீட்டு வந்தனர்.

அதனையடுத்து, மாணவன் கோடீஸ்வரனிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில், பள்ளிக்குச் செல்ல பயந்து தென்காசிக்குச் சென்று ஒரு ஹோட்டலில் வேலை செய்ததாகவும், கடத்தப்பட்டதாக வந்த செய்தியையடுத்து அங்கிருந்த வெளியேறி இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், மாணவன் கோடீஸ்வரன் இதுபோன்று அடிக்கடி வீட்டை விட்டுப் போயுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவனைக் கடத்தியதாகக் கூறி ரூ.25 லட்சம் கேட்டு வந்த தொலைபேசி அழைப்பு யாருடையது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்